Thursday, March 5, 2020

ஜிப்ஸி - சினிமா விமர்சனம்


ஜிப்ஸி - சினிமா விமர்சனம்


குக்கூ, ஜோக்கர் திரைப்படங்களுக்குப் பிறகு ராஜு முருகன் இயக்கியிருக்கும் மூன்றாவது படம். படத்தின் சில காட்சிகளுக்கு தணிக்கை வாரியம் எதிர்ப்பு தெரிவித்த செய்தி வெளியானதையடுத்து, பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் படமும்கூட.
காஷ்மீரில் பிறந்து, பெற்றோர் துப்பாக்கிச் சூட்டில் இறந்துவிட, குதிரையை வைத்து வேடிக்கைகாட்டும் ஒருவரால் வளர்க்கப்படுகிறான் ஜிப்ஸி (ஜீவா). ஊர் ஊராகப் பயணம் செய்யும் ஜிப்ஸி ஒரு முறை நாகூருக்கு வரும்போது, அங்குள்ள இஸ்லாமியப் பெண் (நடாஷா சிங்) அவனைக் காதலிக்கிறாள். இவரும் வட மாநிலம் ஒன்றுக்குச் சென்று திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்களுக்கு குழந்தை பிறக்கும் தருணத்தில் கலவரம் வெடிக்க, அதில் சிக்கி திசைக்கு ஒருவராகப் பிரிகிறார்கள். பிரிந்தவர்கள் சேர்ந்தார்களா என்பது மீதிக் கதை.
தன் மகளின் விருப்பங்களைக் கடுமையாக எதிர்க்கும் இஸ்லாமிய தந்தை, வட மாநிலங்களில் கலவரங்கள் ஏற்படுத்தப்படும் விதம், அதில் சின்னாபின்னமாகும் பலரது வாழ்க்கை, கலவரங்களில் ஈடுபடுபவர்களின் பின்னணி, கலவரங்களின்போது காவல்துறை நடந்துகொள்ளும்விதம் என நீளும் இந்த அடுக்குகளை காட்சியாக்கியிருப்பதில் தெரியும் துணிச்சல் ஆச்சரியமளிக்கிறது. ரசிக்கவைக்கிறது.
தமிழில் வந்த பல திரைப்படங்களில் மதக் கலவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் இந்தப் படம், சம்பந்தப்பட்டவர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் நெருக்கமாகக் காட்டுகிறது. அடிப்படையில் பார்த்தால், ஜிப்ஸி ஒரு காதல் கதையாகத் தென்பட்டாலும், கலவரங்களும் அவற்றால் சிதையும் அப்பாவி மக்களின் வாழ்க்கையும்தான் இந்தப் படம்.
படத்தின் சில பகுதிகள் தமிழ் சினிமாவுக்கே உரியவையாக இருக்கின்றன. திருவிழாவில் வேடிக்கைகாட்ட வரும் ஒருவனை நம்பி ஒரு பெண் வாழ்வை ஒப்படைப்பது, அந்த ஜிப்ஸியை பல மாநிலங்களில் பலருக்கும் தெரிந்திருப்பது போன்றவை உறுத்துகின்றன. ஒரு கலவரத்தின்போது, இந்துவாகவும் முஸ்லிமாகவும் இல்லாத ஒருவன் சிக்கிக்கொண்டு, எப்படி போராடுகிறான் என்பதற்கு ஜிப்ஸியின் பாத்திரம்தான் பொருத்தமானது. ஆனால், படத்தில் வரும் பிற சம்பவங்களுக்கு அது பொருத்தமாக இல்லை.

படத்தின் முதல் பாதியில் சில தருணங்களும் பிற்பாதியில் சில காட்சிகளும் மெதுவாக நகர்கின்றன. மேலும், சில இடங்களில் வெளிப்படையாகவே பிரச்சார பாணியில் சில பாத்திரங்கள் பேசுவது படத்தின் சுவாரஸ்யத்தை கீழே இறக்குகிறது.
நாயகன் ஜீவாவுக்கு வித்தியாசமான பாத்திரம். புதுமுகமாக வரும் நடாஷா, ஒரு நல்ல அறிமுகம். அவரது தந்தையாக வரும் லால் ஜோஷ், மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
சந்தோஷ் நாராயணனின் இசை படத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. வெகு நாட்களுக்குப் பிறகு, பாடல்கள் உறுத்தாமல் இருப்பது இந்தப் படத்தில்தான். அதேபோல, ஒளிப்பதிவும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. எல்லாக் காட்சிகளுமே சம்பந்தப்பட்ட இடத்திலேயே எடுக்கப்பட்டிருப்பதும் கலவர காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் சிறப்பு.
ராஜு முருகனின் முந்தைய படங்களில் தெரிந்த பல பலவீனங்களை இந்தப் படத்தில் அவர் தாண்டிச் சென்றிருக்கிறார். மேலும் சிறப்பான படங்களை எதிர்பார்க்க வைக்கிறார்.


No comments: